கடந்த 25.08.2017 அன்று உள்ளுராட்சி சபைகளுக்கான திருத்த சட்ட மூலமும், 20.09.2017 அன்று மாகாண சபைகளுக்கான திருத்த சட்ட மூலமும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றியும் பெற்று சட்டமாக்கவும் பட்டுவிட்டது.
இலங்கை முஸ்லிம்களின் வாக்குரிமையின் பலத்தை இழக்கச் செய்து, உள்ளாட்சி, மாகாண சபைகளின் பிரதிநிதித்துவத்தை வெகுவாக குறையச் செய்த குறித்த சட்ட மூலத்தில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுத்தான் குறித்த சட்ட மூலம் வெற்றியைப் பெற்றுள்ளது.
கையெழுத்திட்ட அனைவருமே தற்போது தாம் செய்தது மாகா தவறு என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் இலங்கை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இந்த வரலாற்று துரோகம் தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் யாரும் அறியாதிருந்த நேரத்தில் 22.09.2017 அன்று எமது ஊரான கின்னியாவில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவ்வமைப்பின் தேசிய தலைவரும் நாடறிந்த பேச்சாளருமான மௌலவி ரஸ்மின் அவர்கள் இது தொடர்பில் சுமார் இருபது நிமிடங்கள் விளக்கி கூறினார்.
ரஸ்மின் மௌலவி அவர்கள் பேசிய உரை சமூக வலை தளங்களிலும் செய்தித் தளங்களிலும் வெளியிடப்பட்ட பின்னர்தான் இரவோடு இரவாக முஸ்லிம் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி வெளிச்சத்திற்கு வந்தது.
இதுவரை ஓர் ஆன்மீக இயக்கமாகவும், இனவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் அமைப்பாகவும் அறியப்பட்ட SLTJ அமைப்பு இந்தளவு அரசியல் முதிர்ச்சி அடைந்திருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். காலா காலம் அரசியல் வாதிகளாக அறியப்பட்டவர்கள் கூட இவ்வளவு அழகாகவும், சமூக அக்கறையுடனும் இந்த விவகாரங்களை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க முடியாது. அவ்வளவு தெளிவாக தனக்கே உரிய நடையில் இந்த அநியாயத்தையும் அதற்கு துணை போனவர்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்.
தொகுதிவாரி தேர்தல் முறையென்றால் என்ன? விகிதாசாரம் என்றால் என்ன? மாகாண சபைகளில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவதினால் ஏற்படப் போகும் பாதிப்புகள் போன்றவற்றையெல்லாம் மிகத் தெளிவாக குறித்த உரையில் விளக்கியிருந்தார் SLTJ யின் தலைவர்.
இந்த இடத்தில் இன்னொரு விபரத்தையும் குறிட்டாக வேண்டும். பல்லாண்டுகள் அரசியல் செய்யும் அரசியல் வாதிகளினாலும், தங்களைத் தாங்களே முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்ளும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை போன்ற இயக்கங்களினாலும் இத்தனை ஆண்டுகளாக உண்டாக்க முடியாத ஓர் அரசியல் விளிப்புணர்வை ஒரே ஒரு இருபது நிமிட உரையில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் உண்டாக்கி விட்டது தௌஹீத் ஜமாஅத் என்றால் அது மிகையாகாது.
உள்ளாட்சி மற்றும் மாகாண சபைகள் திருத்த சட்ட மூலத்தில் இத்தனை அநியாயம் நடைபெற்றும் இதுவரைக்கும் எந்தவொரு இஸ்லாமிய அமைப்புகளும் இது தொடர்பில் ஒரு சிரிய கண்டனத்தை கூட வெளியிட வில்லை. ஏன் உலமா சபையும் அதன் தலைமையும் கூட இதுவரைக்கும் வாய் திறக்காமல் தான் இருக்கின்றன.
காரணம் என்ன? மொஹப்பத்தாக பழகிய அரசியல்வாதிகளை பகைத்துக் கொள்ள இவர்கள் விரும்ப வில்லை. அரசியல் வாதிகளை பகைத்துக் கொள்வதினால் தங்களுக்கு ஏற்படும் நட்டத்தை நினைக்கிறார்களே தவிர சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை இவர்களில் யாரும் நினைத்தும் பார்க்க வில்லை.
ஆனால் இதுவரைக்கும் இந்த அநியாயத்தை விளக்கி மக்கள் மத்தியில் அரசியல் விளிப்புணர்வை உண்டாக்கி, இனி வரவிருக்கிற புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்களுக்கு இளைக்கப்பட விருக்கிற அநியாயத்தையும் விளக்கி வட கிழக்கு இணைப்பு தொடர்பில் தெளிவாக ஓர் நிலைபாட்டை அறிவித்து மக்களை வழி நடத்துகிறது SLTJ
மார்க்க விவகாரங்களில் ஒவ்வொரு அமைப்பும் தங்கள் விளக்கத்திற்கு ஏற்ப பிரச்சாரங்களை மேற்கொள்வார்கள் அந்த வகையில் SLTJ யின் பிரச்சாரம் மற்ற அனைவரையும் விடுத்து வித்தியாசமானது. குர்ஆன் சுன்னா ஆதாரத்தை கொண்டது. அதனை ஏற்பவர்கள் ஏற்க்கலாம் மறுப்பவர்கள் மறுக்கலாம் அது அவரவரின் ஆதாரத்தை கொண்டது.
ஆனால் தேர்தல் சீர் திருத்தம் தொடர்பில் SLTJ கொண்டிருக்கும் நிலைபாடே இலங்கை முஸ்லிம்களுக்கு விடிவை பெற்றுத் தரக் கூடியது என்பதை நாம் அனைவரும் ஏற்றாக வேண்டும்.
கடந்த 22.09.2017 அன்று எமது ஊரான கின்னியாவில் நடைபெற்ற இவர்களின் பொதுக் கூட்டத்தில் நான் கலந்த கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கலந்து கொண்டவனல்ல. மாறாக அவ்வழியில் சென்று கொண்டிருக்கும் போது மியன்மார் அநியாயங்களை ரஸ்மின் மௌலவி அவர்கள் உணர்வுபூர்வமான பேசிக் கொண்டிருந்ததை அவதானித்து சற்று நேரம் கேட்டேன். பலத்த மழையிலும் மேடையை விட்டு இறங்கி விடாமல் சமுதாய அக்கரையுடன் நனைந்து கொண்டே அவர் பேசியதை ஓரத்தில் நின்று பார்த்தேன். அவர் பேசியவை அனைத்தும் உண்மையே!
அஷ்ரப் அவர்களின் பேரைச் சொல்லி வாக்கு சேகரிக்கும் முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் அரசியல் வாதிகளும் அஷ்ரப் அவர்கள் இந்த சமுதாயத்திற்கு செய்த நன்மைகளின் ஒரு தேக்கரண்டி அளவுக்குக்குக் கூட செய்ததில்லையே?
இந்திலையில் இப்பொது அஷ்ரப் இருந்திருந்தால் கண்டிப்பாக தனது போராட்டத்திற்கு துணையாக SLTJ யையும் இணைத்துக் கொண்டு பயணித்திருப்பார் என்றே என்னத் தோன்றுகிறது.
இன்றைய இலங்கையில் தேர்தல் அரசியலுக்கு அப்பால் நின்று அரசியல் பேசும் ஓர் அமைப்பாக SLTJ மாத்திரம் தான் இருக்கிறது. நாட்டு முஸ்லிம்களுக்கு அரசியல் விளிப்புணர்வை மிக எளிமையாகவும், அவசர கதியிலும் இவர்களினால் மாத்திரமே உண்டாக்க முடியும் என்று நினைக்கிறேன். ஆகவே இவர்களுன் இலங்கை முஸ்லிம்கள் தமது உரிமையை வென்றெடுக்க ஒன்றிணைய வேண்டும் என்பதே அவா!
நம்மை அடகு வைக்காத,
நம்மை காட்டி அரசியல் இலாபமடையாத,
நமது வாக்கை பெற்று நம்மை ஏமாற்றாத,
நம்மிடம் எவ்வித இலாபத்தையும் எதிர்பார்க்காத,
நமக்காக உழைக்கிற
இது போன்ற இயக்கங்களுடன் பயணிப்பதே அரசியல் அநாதைகளாக நாம் மாறாமல் இருப்பதற்கு வழியாகும்.
போராளிகளே! புறப்படுங்கள்! ஓரத்தில் நின்று ஓய்வெடுக்க நேரமில்லை! என்ற மர்ஹும் அஷ்ரப் அவர்களின் இரும்பு வரிகள் இன்று SLMC யுடன் அல்ல SLTJ யுடன் நம்மை பயணிப்பதற்கான வார்த்தைகளாக மாறிவிட்டன.
அமைச்சுப் பதவிகளுக்காக சமுதாயத்தை அடகு வைக்கும் அரசியல் வாதிகளை விட அல்லாஹ்வுக்கு பயந்து சமுதாயத்திற்காக குரல் கொடுக்கும் SLTJ போன்ற அமைப்புகளே விடிவுக்கு வழி என்பதை உணருங்கள்.
அஷ்ரப் என்ற ஆளுமைக்கு பின்னால் அரசியல் ஏற்பட்ட வெற்றிடத்தினை தேர்தல் அரசியலுக்கு அப்பால் நின்று நிறப்புகிறது இந்த அமைப்பு என்பதே பெரும்பாலான பொது மக்களின் கருத்தாகவுள்ளது.
இன்று பாடசாலை முதல் பல்கலைக் கழகங்கள் வரை தௌஹீத் ஜமாஅத் ஏற்படுத்திய இந்த அரசியல் விளிப்புணர்வு மெச்சப்படுகிறது. சுயநலமற்ற இந்த பணியில் ஒன்றினைந்து நமது உரிமைகளை நாமே காத்துக் கொள்ள வேண்டும்.
நான் அறிந்த வகையில் விரைவில் SLTJ சார்பில் கொழும்பில் ஓர் மாநாடு நடைபெறவுள்ளது. முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. காலத்திற்கு பொருத்தமான மிக முக்கியமான மாநாடு.
மார்க்க ரீதியிலான செயல்பாடுகளை முன்னெடுத்து பொதுக் கூட்டம், பிரச்சாரங்கள், மாநாடுகள் என்று செயல்பட்ட ஓர் அமைப்பு இலங்கை வரலாற்றில் முஸ்லிம் உரிமைகளுக்காகவே முதன் முறையாக எந்தவொரு அமைப்பும் செய்யாத செய்யத் துணியாத வகையில் தலை நகர் கொழும்பிலேயே இப்படியொரு மாநாட்டை நடத்துவது என்பது இலங்கை வரலாற்றில் பொன்னெழுத்துக்களினால் எழுதப்பட வேண்டிய ஒன்றாகும்.
கட்சிக்காக, தலைவருக்காக, இயக்கத்திற்காக நடத்தப்பட்ட பல மாநாடுகளை இலங்கை கண்டுள்ளது. ஓர் இஸ்லாமிய அமைப்பு இழந்த அரசியல் உரிமைகளை விளக்கியும், இருக்கும் உரிமைககளை காக்கவும் இப்படியொரு மாநாட்டை நடத்துவது காலத்தின் கட்டாயம் அதனை இப்போது கையிலெடுத்திருக்கிறது SLTJ.
இனியொரு விதி செய்வோம். என்ற முழுமொழிக்கிணங்க இம்மாநாட்டில் குடும்பத்துடன் பங்கெடுக்க தயாராவோம். நமது பெருநாட்களில் ஓர் பெருநாளாக இது அமையப் போகிறது என்றால் மிகையல்ல. நானும் எனது குடும்பமும் எதிர்காலத்தில் உரிமையுடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் எனது உரிமைகள் பாதுகாக்கப்பட வெண்டும் இல்லா விட்டால் எனது நாடும் ஓர் மியன்மார் தான் என்பதை நினைத்தே இதனை எழுதுகிறேன்.
கட்சி வேறுபாடுகளையும், இயக்க வேறுபாடுகளையும் கலைவோம், முஸ்லிம் உரிமைக்காக முஸ்லிம்கள் என்ற வகையில் ஒன்றினைவோம் “வாழ்வுரிமை மாநாட்டில் கொழும்பில்” குடும்பத்துடன் சங்கமிப்போம்.
போராளிகளே! புறப்படுங்கள்! ஓரத்தில் நின்று ஓய்வெடுக்க நேரமில்லை!
இவன்,
சீனித் தம்பி அலியார் – ஓய்வு பெற்ற நடத்துணர்

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.