லண்டன்,
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான வன்முறையை கண்டித்து ஆங் சான் சூகி குரல் கொடுக்க வேண்டும் என உலகமே காத்துகொண்டிருக்கிறது என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் கல்வி ஆர்வலர் மலாலா யூசப்சாய் தெரிவித்துள்ளார்.
புத்த மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் மியான்மரில், சிறுபான்மையினரான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மியான்மர் ராணுவம் பல வன்முறைகளை அரங்கேற்றி வருகின்றது. அதனால் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசம், இந்தியா போன்ற நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்கள் மற்றும் மியான்மர் ராணுவத்தினர் இடையே பெரும் மோதல் வெடித்தது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த வன்முறைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த மோதலில் இருந்து உயிர் பிழைக்க ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்திற்கு குடிபெயர்ந்து வருகிறார்கள். இதுவரை 58,600 அகதிகள் வங்கதேசத்திற்கு குடிபெயர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மியான்மர் தலைவரும் மியான்மரின் வெளியுறவுதுறை அமைச்சருமான ஆங் சான் சூகி உலகமே கண்டிக்கும் இந்த வன்முறைகளை தடுக்க, எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்து செய்தி வெளியிட்டுள்ளார் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் கல்வி ஆர்வலரான மலாலா யூசப்சாய்
‘‘கடந்த சில வருடங்களாகவே ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான மோசமான வன்முறையை கண்டித்து நான் குரல் கொடுத்து வருகிறேன். மியான்மர் ராணுவத்தினரால் சிறு குழந்தைகள் கொல்லப்படும் புகைப்படங்களை நாம் பார்கிறோம். அந்த அப்பாவி குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள் ? இந்த வன்முறையை இன்றே நிறுத்துங்கள்’’
‘‘அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகி இந்த கொடுமைகளுக்கு எதிராக விரைவில் குரல் கொடுப்பார் என நான் காத்திருக்கிறேன். அவரது குரலுக்காக ரோஹிங்கியா முஸ்லிம்களும் உலக மக்களும் காத்திருக்கிறார்கள்’’ என மலாலா கூறியுள்ளார்.
மியான்மரில் வசிக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளிநாட்டவர்கள் என்று அந்நாட்டின் புத்த மதத்தினர் கூறி வருகிறார்கள். இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள மலாலா ‘‘பல தலைமுறைகளாக மியான்மரில் வாழும் அவர்களுக்கு மியான்மரில் வாழ உரிமையில்லை என்றால் அவர்கள் எங்கு சென்று வாழ்வார்கள்? ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மியான்மரில் நிரந்திர குடியுரிமை வழங்க வேண்டும்’’ எனக் கோரியுள்ளார்.
மேலும் வங்கதேசத்தை போல் பாகிஸ்தான் உட்பட மற்ற நாடுகளும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு புகலிடம் அளிக்க வேண்டும் என மலாலா வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.